பதிவு செய்த நாள்
01
அக்
2012
10:10
ஈரோடு: மாநிலம் முழுவதும், தாலுகாவுக்கு, 50 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவில்களை பட்டியலிடும் பணியில், அறநிலையத் துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.தமிழகத்தில், 38,421 கோவில்களும், ஈரோடு மாவட்டத்தில், 1,300க்கும் மேற்பட்ட கோவில்களும், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழகத்தில் ஆட்சியமைத்த முதல்வர் ஜெயலலிதா, அன்னதானத் திட்ட விரிவாக்கம், கோவில் நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை, கோவில் நிலம் மீட்பு, கோவில் யானைகள் பராமரிப்பு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். சில மாதத்துக்கு முன், தமிழகத்தில் அறநிலையத் துறையின் கீழ் உள்ள, ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த ஆணை பிறப்பித்தார். தமிழகம் முழுவதும் கும்பாபிஷேகம் காணாத, அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.இது குறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது:மாநிலம் முழுவதும் தாலுகாவுக்கு, 50 கோவில்கள் என்ற அடிப்படையில், கும்பாபிஷேகம் நடத்த வேண்டிய கோவில்களை தேர்வு செய்யும் பணியில், அறநிலையத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில், கும்பாபிஷேகம் காணாத கோவில்களின் எண்ணிக்கை, தாலுகா வாரியாகப் பிரித்து, அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.