திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் ஓரம் புனரமைக்கப்பட்ட ஜீயர் சமாதியில், மீண்டும் முட்செடிகள் படர்ந்துள்ளது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவில் ஜீயர் பராமரிப்பின் கீழ் தொன்றுதொட்டு இருந்த வருகிறது. அதற்கென்று தனிப்பட்ட பாரம்பரியத்துடன் விளங்கும் இக்கோவிலை நிர்வகிக்கும் ஜீயர்கள் இறந்தபின், அவர்களுக்கென தென்பெண்ணை ஆற்றை ஒட்டி சமாதிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சமாதிகள் மரம் முளைத்து பராமரிப்பின் தடயம் இன்றி அழியும் நிலை ஏற்பட்டது.கோவில் நிர்வாகத்தின் சார்பில் தொன்மையை பராமரிக்கவும், உயிர் நீத்த ஜீயர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அப்பகுதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப் பட்டது. பழமை மாறாமல் சீரமைக்கப்பட்ட இந்த சமாதிகள் அவ்வழியாக செல்வோரை சிந்திக்க வைப்பதாக உள்ளது. தற்போது மீண்டும் முட்செடிகள் வளர்ந்து, சமாதியை மறைக்கும் அளவிற்கு படர்ந்துள்ளது.இதனால் சமாதிக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் முள் செடிகளை அகற்றிட வேண்டும். ஜீயர்களின் நினைவிடத்தில் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்களை அறியும் வகையில், சுற்றுச் சுவர் அமைத்து பாதுகாக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.