ராஜபாளையம்: ராஜபாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால், மழைவேண்டி, நீர்காத்த அய்யனார்கோயிலில் சிறப்பு யாகத்தை நகராட்சி தலைவர் தனலட்சுமி நடத்தினார். ராஜபாளையம் நகராட்சி பகுதிக்கு தாமிரபரணி குடிநீர் இதுவரை கிடைக்கவில்லை. தற்போதைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் தான், ராஜபாளையத்திற்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.மலையில் மழை பெய்யாததால், ராஜபாளையம் நகரில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலைய தொட்டிகளில் ஆழ்துளை குழாய், கிணறு மற்றும் தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு, நகருக்கு சப்ளை நடக்கிறது. இந்த திட்டமும் அதிகநாள் தாக்குபிடிக்காது. மழைவேண்டி, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள நீர்காத்த அய்யனார் கோயிலில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வருணபகவானுக்கு சிறப்பு யாகம் துவங்கியது. யாகத்தை சத்தியானந்த போத்தி நடத்தினார். இரவு 10.30 மணிக்கு முடிந்தது. நீர்காத்த அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தன. நகராட்சி தலைவர் தனலட்சுமி, ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் செல்வ சுப்பிரமணிய ராஜா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.