பதிவு செய்த நாள்
14
ஜூன்
2023
11:06
நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோவிலில், போதுமான நிதி இல்லாததால், திருமண மண்டபம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பணியை நிறைவு செய்ய, திருவண்ணாமலை கோவிலில் இருந்து கடன் கேட்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து, ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம.ரவிகுமார் கூறியதாவது: சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம், ஜூலை 7ல் நடக்க உள்ளது. அதற்குள் கோவிலுக்கு என, 3.90 கோடி ரூபாய் செலவில் திருமண மண்டபம் கட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. சுனாமி தாக்குதலின் போது, சிக்கல் சிங்காரவேலர் கோவிலுக்கு சொந்தமாக. செல்லுார் கிராமத்தில் இருந்த, 168 ஏக்கர் நிலம் அரசு பணிகளுக்காககையகப்படுத்தப்பட்டது. அமெரிக்க அரசு வழங்கிய சுனாமி நிவாரண தொகையில் இருந்து, இந்த நிலத்துக்கான இழப்பீட்டு தொகையாக, 4 கோடி ரூபாயை, மாவட்ட நிர்வாகம், சிக்கல் சிங்காரவேலர் கோவிலுக்கு வழங்கியது. இந்த தொகை கோவில் வங்கி கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது; அதற்கு வட்டி வருகிறது. அதை கோவில் நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். திருமண மண்டபம் கட்ட தேவையான பணத்தை, வங்கியில் உள்ள தொகையில் இருந்து எடுத்து கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டது; அறநிலையத்துறை ஒப்புதலும் பெறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பக்தர்கள், வழக்கு போட்டுள்ளனர். இதையடுத்து, வங்கியில் உள்ள பணத்தை எடுக்க முடியவில்லை. இருந்தபோதும், திருமண மண்டபம் கட்ட டெண்டர் விடப்பட்டு, முதற்கட்ட பணியும் துவங்கி விட்டது.
அறநிலையத்துறை மேலதிகாரிகள் அளித்த ஆலோசனையின் படி, சிக்கல் சிங்காரவேலர் கோவில் நிர்வாகம், மண்டபத்தின் மீதி பணிகளை முடிக்க தேவையான, 3.60 கோடி ரூபாயை, திருவண்ணாமலை கோவிலில் இருந்து கடனாக பெறுவது என முடிவு எடுக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு, 6 சதவீத வட்டியுடன், 3.60 கோடி ரூபாயை கடனாக பெறுவது; திருமண மண்டபத்தை வாடகைக்கு விடுவதன் வாயிலாக கிடைக்கும் பணத்தில் இருந்து அசலையும், வட்டியையும் திருப்பி செலுத்துவது என்றும்திட்டமிடப்பட்டது. அறநிலையத்துறையினர், இந்த திட்டத்துக்கு திருவண்ணாமலை கோவில் நிர்வாகத்தையும் சம்மதிக்க வைத்து விட்டனர். நாகப்பட்டினம் அருகில் இருக்கும் சிறிய கிராமம் சிக்கல். அந்த ஊரில் ஏற்கனவே, ஆறு தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன. அவற்றின் வாடகை நாள் ஒன்றுக்கு, 20,000 ரூபாய் தான். ஆனால், சிங்காரவேலர் கோவிலின் திருமண மண்டபத்துக்கு, 50,000 ரூபாய் வாடகை வசூல் செய்ய திட்டமிட்டுஉள்ளனர். திருவண்ணாமலை கோவிலிடம் இருந்து பெறப்படும் கடனுக்கான வட்டி, அசல் தொகையை முறையாக செலுத்துவர் என்பதற்கு, எந்த உத்தரவாதமும் கிடையாது. முடியாது என்று தெரிந்தே, சிக்கல் சிங்காரவேலர் கோவில் நிர்வாகம், கடன் வாங்க முயற்சிக்கிறது. திருவண்ணாமலை கோவிலில் இருக்கும் தொகையும், பக்தர்கள் காணிக்கையாக அளித்ததுதான். திருவண்ணாமலை கோவில் நிர்வாகத்தை கடனுக்காக அணுகுவதற்கு முன், அருகில் இருக்கும் எட்டுக்குடி முருகன் கோவில், நன்னிலம் சிவன் கோவில், ஆலங்குடி குரு கோவில் நிர்வாகத்தினரையும் அணுகியுள்ளனர். மூன்று கோவில்களிடம் இருந்தும் தலா, 1.20 கோடி பெறலாம் என திட்டம். ஆனால், அந்த கோவில் நிர்வாகங்கள் மறுத்து விட்டன. தவறான நோக்கத்துடன், கோவிலுக்கு திருமண மண்டபம் கட்ட தேவையில்லை. திருவண்ணாமலை கோவில் நிர்வாகம், இப்போதே விழித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால்,பக்தர்கள் பணம் அம்போ. இவ்வாறு ராம.ரவிக்குமார் கூறினார்.
செலுத்த முடியும்: திருமண மண்டபத்துக்காக பெறப்படும் கடனுக்கான வட்டியை, வங்கியில் உள்ள டிபாசிட் வாயிலாக கிடைக்கும் வட்டித்தொகையில் இருந்து முறையாக செலுத்த முடியும். செல்லுார் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சொந்தமான வேறு சில நஞ்சை நிலங்களை, நாகப்பட்டினம் பஸ் நிலையம் அமைக்க எடுக்கலாம் என, அரசு தீர்மானித்துள்ளது. அப்படி எடுத்தால், அரசிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் வரும். அதுவும் டிபாசிட் தொகையில் தான் சேரும். எனவே, திருவண்ணாமலை கோவிலில் இருந்து பெறப்படும் தொகைக்கு, வட்டியும், அசலும் முறையாக செலுத்தப்படும் .-முருகன், சிக்கல் சிங்காரவேலர் கோவில்செயல் அலுவலர்;
- நமது நிருபர் -