பதிவு செய்த நாள்
19
ஜூன்
2023
05:06
விழுப்புரம் சுப்பிரமண்ய சாஸ்திரிகள், கல்வித் துறையில் பள்ளிகளின் மேற்பார்வையாளராக இருந்தவர். அவருடைய இரண்டாவது புதல்வர் சுவாமிநாதன். காஞ்சி மகாபெரியவருக்கு இளமையில் சூட்டப்பட்ட பெயர் அது. ‘விளையும் பயிர் முளையிலே’ என்பதற்கேற்ப சிறுவயதிலிருந்தே சுவாமிநாதன், அறிவுக்கூர்மையும், சாதுர்யமும் மிக்கவராகத் திகழ்ந்தார். சாஸ்திரிகள் திண்டிவனத்தில் பணியாற்றியபோது, சுவாமிநாதன் அங்கிருந்த ஆற்காடு அமெரிக்கன் மிஷன் ஹை ஸ்கூலில் இரண்டாவது பாரம் படித்து வந்தார். அப்போது, கிறிஸ்தவ மத நுõலான பைபிளைப் படித்து தேர்ச்சி பெற்றதால் ஆண்டுவிழாவில் முதல்பரிசு பெற்றார். எல்லா பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெற்று வகுப்பில் சிறந்த மாணவனாகவும் விளங்கினார். இதனால், ஏராளமான பரிசுகளைப் பெற்றார். பள்ளி ஆசிரியர்கள் சுவாமிநாதன் மீது அளவற்ற அன்பும், விருப்பமும் கொண்டிருந்தனர். சுவாமிநாதன் மூன்றாம் பாரம் படித்த போது, மாணவர்கள் கல்வித்திறனைச் சோதிக்க கல்வித்துறை உதவி இன்ஸ்பெக்டர் மஞ்சக்குப்பம் சிங்காரவேலு முதலியார் அமெரிக்கன் மிஷன் பள்ளிக்கு வந்திருந்தார்.சுவாமிநாதன் கேட்ட கேள்விகளுக்கு தங்கு தடையின்றி அழகாகப் பதிலளித்தார். சுவாமிநாதனின் தீட்சண்யமான முகத் தோற்றத்தைக் கண்ட அந்த அதிகாரி, வியப் பில் ஆழ்ந்தார். சுவாமிநாதனை அழைத்துச் சென்று, அங்குள்ள மற்ற ஆசிரியர்களிடமும், மேல் வகுப்பு பயிலும்மாணவர்களிடமும்அறிமுகப்படுத்தினார். அந்த மாணவர்களைக் கொண்டே, சுவாமிநாதனிடம் கேள்விகள் கேட்கும்படி அதிகாரி சொல்ல, அவற்றுக்குமாணவரான சுவாமிநாதன் சிறப்பாகப் பதில் அளித்தார். ஆச்சரியப்பட்டஅதிகாரியிடம், ஆசிரியர்கள், சுவாமிநாதனின் தந்தை சுப்பிரமண்ய சாஸ்திரிகளும் கல்வித்துறையில் பணியாற்றும் விஷயத்தை தெரிவித்தனர். தனக்கு கீழ் பணியாற்றும் சுப்பிரமண்யசாஸ்திரிகளின் மகன் தான் இந்த மாணவன் என்பதை அறிந்ததும், “உமது புதல்வர் பெரிய மேதாவியாக எதிர்காலத்தில் விளங்குவார். ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது,” என்று கூறி அந்த அதிகாரி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிற்காலத்தில் இந்த சுவாமிநாதனே உலகமே வணங்கும் ஜகத்குருவானார். காஞ்சிப்பெரியவராக, நம் மனங்களில் நீங்கா இடம் பிடித்த மகானாக விளங்குகிறார்.