பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில், அம்பிகை விஷ்ணுவின் அம்சமாக சங்கு சக்கரத்துடனும், சிவாம்சமாக கபாலம் ஏந்தியும் வீற்றிருக்கிறாள். வேப்ப இலை ஆடை அணிந்து அம்மனை வலம் வருவது முக்கிய பிரார்த்தனை. நோய், விபத்திலிருந்து உயிர் பிழைத்தவர்கள் நன்றிக்கடனாக இந்த வழிபாட்டை செய்கின்றனர். அதேபோல, இங்கு தாலிதானம் செய்வதும் சிறப்பு. பெண்கள், கடும் நோய்வாய்ப்பட்ட தங்கள் கணவர் உயிரைக் காப்பாற்ற தாலிதானம் செய்வதாக வேண்டிக் கொள்வர். கணவனும் மனைவியுமாக கோயிலுக்கு வந்து, பழைய திருமாங்கல்யத்தை உண்டியலில் செலுத்துவர். பிறகு மஞ்சளும் புதிய திருமாங்கல்யமும் கோர்த்த தாலிக் கயிற்றை மனைவியின் கழுத்தில் கணவர் அம்பாள் முன்னிலையில் கட்டுவார்.