பதிவு செய்த நாள்
22
ஜூன்
2023
10:06
கரூர்: இரு பிரிவினர் பிரச்னையால், ‘சீல்’ வைக்கப்பட்டிருந்த கடவூர் அருகில் உள்ள, வீரணம்பட்டி காளியம்மன் கோவில், மீண்டும் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது. கரூர் மாவட்டம், கடவூர் அருகில் மேலப்பகுதி கிராமம், வீரணம்பட்டியில் உள்ளது காளியம்மன் கோவில். இரு பிரிவினரிடையே வழிபாடு செய்வது தொடர்பான பிரச்னையால், சில நாட்களுக்கு முன்பு கோவில் பூட்டி, ‘சீல்’ வைக்கப்பட்டது. இதையடுத்து, இரு பிரிவினர் இடையே கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, கலெக்டர் பிரபுசங்கர், எஸ்.பி.,சுந்தரவதனம் முன்னிலையில், வீரணம்பட்டி காளியம்மன் கோவில் வழிபாட்டிற்கு நேற்று திறந்து வைக்கப்பட்டது. பின், கலெக்டர் பிரபுசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவிழாவின் போது, இரு பிரிவினரிடையே சச்சரவுகள் ஏற்பட்டன. பின்னர், அனைத்து தரப்பு மக்களுடைய ஒருமித்த முடிவின் அடிப்படையில், தற்போது கோவில் திறக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. இது அனைத்து ஊர்களுக்கும், முன்னோடியாக வீரணம்பட்டி கிராமம் திகழும் என்பதில் ஐயமில்லை. ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். குளித்தலை ஆர்.டி.ஓ., ேஷாபா, சப்–கலெக்டர் சைபுதீன் உள்பட பலர் பங்கேற்றனர்.