ஆத்துார்: கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கல்பகனுாரில், சுயம்பு மகமாயி மாரியம்மன், கூத்தாண்டவர் கோவில் உள்ளது. அங்கு கடந்த, 17ல் திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் சுயம்பு மகமாயி மாரியம்மன் தேர் திருவிழா நடந்தது. நேற்று கூத்தாண்டவர் தேர் திருவிழா நடந்தது. மாலை, 3:30 மணிக்கு, 30 அடி உயர தேரை, ஏராளமான பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியே வடம் பிடித்து இழுத்து வந்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இன்று அலகு குத்துதல், மாவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை மஞ்சள் நீராட்டு விழா, வசிஷ்ட நதி கரையில் சுவாமிகள் குடிவிடுதல் நிகழ்ச்சி நடக்க உள்ளது. தேர் திருவிழாவையொட்டி அசம்பாவிதங்களை தடுக்க, தேர் செல்லும் பாதைகளில், 70 ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதன் கண்காணிப்பு பணியில் ஆத்துார் ஊரக போலீசார் ஈடுபட்டிருந்தனர்.