‘தினமும் விளக்கேற்று’ என பெரியவர்கள் சொல்கிறார்களே! ஒரு சுவீட்சை தட்டினால் வண்ண விளக்குகள் சுவாமி படங்களை சுற்றி எரிகிறதே என சிலர் நினைப்பதுண்டு. அப்படிப்பட்டவர்கள் விளக்கின் தத்துவத்தை அறிவது அவசியம். * விளக்கேற்ற ‘திரி’ என்னும் கயிறு வேண்டும். கயிறை ‘ பாசம்’ என்பர். பாசம் என்னும் கயிற்றால் மனிதன் கட்டப்பட்டிருக்கிறான். குடும்பம், குழந்தை, பணம் என நமக்கு பல விஷயங்களின் மீது பாசம் (ஈடுபாடு) இருக்கிறது. * விளக்கெரிய எண்ணெய் தேவை. எண்ணெய்யை ‘ஸ்நேகம்’ என்பர். ‘ஸ்நேகம்’ என்றால் நட்பு, அல்லது உறவு. எண்ணெய்யை விளக்கில் ஊற்றும் போது பிசுக்கு ஒட்டும். இதுவே வாழ்வின் மீதுள்ள பற்றைக் குறிக்கும். * விளக்கில் ‘ஜோதி’ என்னும் நெருப்பு ஏற்றப்படும். இது திரி, எண்ணெய்யை கரைத்து விடும். கடைசியில் அதுவும் அணையும். அதாவது பந்த பாசம், பற்றை அறுத்தால் ஞானம் என்னும் ஜோதியில் (கடவுள்) ஐக்கியம் ஆகலாம் என்பதே தத்துவம். அடேயப்பா! இவ்வளவு விஷயம் இருக்கும் போது விளக்கு ஏற்றாமல் இருக்கலாமா என்ன!