பதிவு செய்த நாள்
27
ஜூன்
2023
04:06
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளத்தில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் (சிவன்) கோவில் உள்ளது. இன்று காலை துப்புரவு பணியாளர் வந்து பார்த்த போது, கற்சிலை, மர வாகன சிலைகளை உடைத்து சேதப்படுத்தியும், பழைய பராமரிப்பு ஆவணங்களை மர்ம நபர்கள் எரித்து சேதப்படுத்தியுள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து, கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து பார்த்த போது, 3 அடி உயரமுள்ள முருகன் சிலை, 3 அடி உயரமுள்ள பைரவர் சிலை, 3.5 அடி உயரமுள்ள கருடாழ்வார் மர வாகன சிலை, 4 அடி உயரமுள்ள சிங்க வாகன சிலை, மேலும் கோவிலின் உள்ளே இருந்த அனையா தீப விளக்கு, கோவில் பராமரிப்பு பழைய பதிவேடு எரிக்கப்பட்டிருந்தது. இது குறித்து கோயில் நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார், அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து, ஆய்வு செய்ததில், சிலைகளை சேதப்படுத்திய நபர் செட்டிக்குளம் அருகே உள்ள மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்த நல்லுசாமி மகன் செல்வராஜ்,36, என்பது தெரியவந்தது. மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.