சின்னாளபட்டி கோயில் விழாவில் கத்தி போட்டு நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2023 11:06
சின்னாளபட்டி: சின்னாளபட்டி கோயில் விழாவில் பக்தர்ர்கள் மார்பில் கத்தி போட்டு வழிபாடு செய்தனர். சின்னாளபட்டி 10வது வார்டு தென்புதூரில், ராமலிங்க சவுடம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் விழாவில், மார்பில் கத்தி போட்டு வழிபாடு செய்வது பிரசித்தி பெற்றது. இந்தாண்டு விழாவிற்காக ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு, பிருந்தாவன தோப்பில் இருந்து சஞ்சீவி தீர்த்தம் அழைப்பு நடந்தது. நேற்று அம்மன் அழைப்புக்காக அம்பாத்துறை அருகே உள்ள போர்பண்டைக்கு, பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பாரம்பரிய வழக்கப்படி, அம்பாத்துறை ஜமீன் துரைப்பாண்டியன் மாக்காள நாயக்கர் அழைப்பு நடந்தது. ஜமீன் தானமாக வழங்கிய குதிரைக்கு, சிறப்பு வழிபாடு நடந்தது. போர்பண்டையில் இருந்து அம்மன் கத்திக்கு பூ அலங்காரம், காதோலை, கருகமணியுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. குதிரை வாகனத்தில், கோயில் நோக்கி கரக ஊர்வலம் நடந்தது. விரதம் இருந்த செவ்வலேர் வம்சத்தை சேர்ந்த தேவாங்க செட்டியார் சமூகத்தினர், சவுடம்மா தீசிக்கோ என்ற கோஷத்துடன் தங்கள் மார்பில் கத்தி போட்டு அழைத்து வந்தனர். பின்னர் கோயிலில் சக்தி மாவு சேர்த்தல், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.