காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2023 05:06
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் திருப்பணி வேலைகளில் ஒன்றாக புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி மற்றும் சுவாமிக்கு வைரப் பட்டை சார்த்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் புராதானமானது. கால தோஷ நிவர்த்தி தலமாகும். ராகுவும், கேதுவும் தனித்தனி சன்னதிகளில் தம்பதியர் சகிதமாக எழுந்தருளியுள்ளனர். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ராகு காலத்தில் இங்கு பரிகார பூஜைகள் நடைபெறுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோயில் திருப்பணி வேலைகள் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உபயதாரர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. க்கிய பணிகளை கம்பம் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது. அதில் ஒரு பணியாக 42 அடி உயரம் கொண்ட கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க காலை 11.10 மணியளவில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கூடியிருந்த பக்தர்கள் ஹர ஹர மகாதேவா என கோஷமிட்டனர். தொடர்ந்து ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பாஸ்கர், சுவாமிக்கு வைரம் பதித்த நெற்றி பட்டையை கோயில் செயல் அலுவலரிடம் வழங்கினார். பின்னர் சுவாமிக்கு வைரப் பட்டை சார்த்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், பிடிஆர் விஜயராசன், முன்னாள் திருப்பணி குழுத் தலைவர் சண்முகம், செயலாளர் செல்வம், ஒம் நமோ நாராயணா பக்த சபை தலைவர் அய்யப்பன், செயலாளர் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சுவாமிக்கு வைரப் பட்டை சார்த்திய பாஸ்கருக்கு, ஒம் நமோ நாராயணா பக்த சபை சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலைய துறை செயல் அலுவலர் இளஞ்செழியன் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.