திருக்கோஷ்டியூரில் மூலவர் பெருமாளுக்கு தைலப் பிரதிஷ்டை மகோத்ஸவம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2023 05:06
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் பெரிய பெருமாள் மூலவருக்கு இன்று சந்தன, சாம்பிராணி தைலப்பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து 48 நாட்களுக்கு திருமுக தரிசனம் மட்டும் பக்தர்களுக்கு அனுமதிக்கப்படும்.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் மூலவர் சயன கோலத்தில் பள்ளி கொண்ட பெருமாள் ஆக காட்சி தருகிறார். 5000 ஆண்டுகளுக்கு முன் முதல் ஆழ்வாரால் பாடல் பெற்றவர். இவரது புராதனமான திருமேனிக்கு தெய்வ சாத்வீக ரீதியாக சந்தனம், அகில், தேவதாரு, சாம்பிராணி உள்ளிட்ட 8 திரவியங்கள் சார்த்தப்படுவது மரபாக உள்ளது. இந்த மகோத்ஸவத்தை தரிசிப்பது 64 கும்பாபிஷேகங்களுக்கு சமமானது என்று கூறப்படுகிறது. கடந்த 2010 ல் மூலவருக்கு ‛ஜ்யேஷ்டாபிஷேக த்ருவ தைலப்ரதிஷ்டை’ நடந்தது. அதன்பின்னர் தற்போது நடைபெற்றுள்ளது. மகோத்ஸவம் ஜூன் 25 ல் யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. 2,3ம் நாட்களில் மகாசாந்தி ஹோமம், பிரதான ஹோமங்கள் நடந்தன. திருக்கோஷ்டியூர், ஸ்ரீவில்லிப்புத்தூர், திருக்கூடலுார் பட்டாச்சார்யர்களால் வைகானஸ ஆகம முறைப்படி நடத்தப்பட்டது. நான்காம் நாள் தைலம் சார்த்தப்பட்டது.
இன்று காலை 8:40 மணிக்கு யாகசாலையில் பூர்ணாகுதி நிறைவுற்று கடங்கள் புறப்பாடு ஆனது. தொடர்ந்து ராஜகோபுரத்தில் 2,3ம் நிலைகளில் எழுந்தருளியுள்ள உபேந்திர நாராயணர்,பரமபத நாராயணர் மற்றம் மூலவர் பெரியபெருமாளுக்கும் கும்பாபிஷேகம் நடந்து தைலப்பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து ஆழ்வாருக்கு மங்களாஸாசனம் , சாத்துப்படி வைபவங்கள் நடந்தது. இதனையடுத்த அடுத்த 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜைகள் நடப்பதால், மூலவர் திருமேனி தரிசனம் பக்தர்களுக்கு இருக்காது. மூலஸ்தானத்தில் திரையிட்டு மூலவர் திருமுக தரிசனம் மட்டும் நடைபெறும்.