பதிவு செய்த நாள்
29
ஜூன்
2023
06:06
சூலூர்: பெரிய குயிலி ஸ்ரீ கீதா பஜன் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் அடுத்த பெரிய குயிலியில், கீதா பஜன் அறக்கட்டளை சார்பில், இரண்டு ஏக்கர் பரப்பளவில் ஆஞ்சநேயர் ஸ்தலம் அமைக்கப்பட்டது. 1008 மூலிகை மரங்கள், 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இங்கு, 10 அடி உயரம் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழா, கடந்த, 28 ம்தேதி காலை, விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. புனிதநீர் கலசங்கள் வைக்கப்பட்டு, இரண்டு கால ஹோமங்கள், பூர்ணாகுதி நடந்தது. மூல மந்திர ஹோமம், அஸ்திர ஹோமம், மற்றும் காயத்திரி மந்திர ஹோமம் நடந்தது. இன்று காலை இரண்டாம் கால ஹோமம் முடிந்து புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. பக்தர்கள் ஆஞ்சநேய சுவாமிக்கு ஜெய் என, கோஷமிட்டனர். 9:30 மணிக்கு ஸ்ரீ கீதா பஜன் ஆஞ்சநேய சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. பக்தர்கள் ராம நாமங்களை ஜபித்தனர். பஜனை, நாம சங்கீர்த்தனத்தில் பங்கேற்று பாடினர். நாளை காயத்திரி ஜபமும், நாளை ஹனுமன் சாலீஸா பாராயணமும், வரும், 2 ம்தேதி பிருந்தாவன நாட்டியத்துடன் கீதா பஜன் நடக்கிறது.