சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் கழுவன் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2023 04:07
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் கழுவன் திருவிழா நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயில் வைகாசி விசாக திருவிழா ஜூன் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6ம் திருவிழாவான ஜூன் 30ம் தேதி கழுவன் திருவிழா நடந்தது. பாரம்பரிய முறைப்படி கழுவன் வேடமிட்டவரை கயிற்றால் கட்டி நாட்டார்கள் அமர்ந்திருந்த சபைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கோயிலுக்குள் திரண்டிருந்த ஏராளமான இளைஞர்கள் கழுவனை விரட்டினர். கழுவன் வேடமிட்டவர் திரும்ப விரட்டுவது போல் பாசாங்கு செய்தார். முற்காலத்தில் கிராமத்திற்குள் திருட வந்த கழுவனை மக்கள் பிடித்து சிங்கம்புணரி நாட்டார்களிடம் ஒப்படைத்ததாகவும், நாட்டார்கள் அவரை மன்னித்து பரிவட்டம் கட்டி மரியாதையோடு ஊரை விட்டு அனுப்பியதாகவும், ஊர் எல்லையில் படுத்து உறங்கிய கழுவனும் அவரது மனைவி கழுவச்சியும் சேவுகப்பெருமாள் ஐயனாரின் தேர் சக்கரம் ஏறி இறந்ததாக ஐதீகம். மேலும் மதுரையில் பாண்டியர் காலத்தில் நடந்த சமணர் கழுவேற்றம் சம்பவத்தை நினைவு கூறும் வகையிலும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ஜூலை 3ம் தேதி மாலை 3:00 மணிக்கு இக்கோயில் திருத்தேரோட்டம் நடக்கிறது.