ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் பக்தர்கள் குவிந்திருந்த நிலையில், காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு மலை ஏறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டமான சூழல் காணப்பட்டதால் பக்தர்கள் சிரமமின்றி மலையறினர். மதியம் 12 30 மணி வரை சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பவுர்ணமி பூஜை வழிபாடுகளை கோயில் பூசாரிகள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மலையில் கோயில் நிர்வாகத்தின் சார்பிலும், அடிவாரத்தில் தனியார் படங்களின் சார்பிலும் பக்தர்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.