ஆக்கிரமிப்பால் பார்க்கிங் ஏரியாவாக மாறிய பழைமையான கோயில் சன்னதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2023 12:07
சோழவந்தான்: சோழவந்தானில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஜெனக நாராயண பெருமாள் கோயில் சன்னதி பார்க்கிங் ஏரியாவாக மாறியது. இதனால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டு, வடக்கு வழிப்பாதையில் வந்து செல்கின்றனர்.
இக்கோயிலின் கிழக்கு சன்னதி வாசல் முன்பு டூவீலர், கார்களை நிறுத்தி செல்கின்றனர். இதில் ஆக்கிரமிப்புகளும் உள்ளது. இதனால் இங்கு சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஜெனகை மாரியம்மன் கோயில் வாசல் வழியே வடக்கு வழியில் வந்து செல்கின்றனர். முன்பு, கிழக்கு சன்னதி வீதி வழியே பெருமாளை தரிசித்துவிட்டு, பிறகு ஜெனகை மாரியம்மனை தரிசனம் செய்து வந்தனர். தற்போது சில இடையூறுகளால் தலைகீழாக மாறிவிட்டது. இதில் முக்கியமாக பங்குனி மஹோற்ஸவத்தில் சுவாமி வீதியுலா புறப்பாட்டிற்கும் இடையூறாகவே இருந்தது. இக்கோயில் பிரசித்தி பெற்ற சுக்கிர ஸ்தலமாக விளங்குகிறது. ஆகையால் இங்கு திருமண தடை நீங்க சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபடுகின்றனர். கோயிலின் கிழக்கு சன்னதி வழியே செல்ல பல இடையூறுகள் உள்ளதால், பக்தர்கள் வடக்கு வாசலை பயன்படுத்துகின்றனர். இதனால் ஜெனக நாராயண பெருமாள் கோயிலின் ராஜகோபுர வீதி பொலிவிழந்து உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும், விழாக்காலங்களிலும் வருகை தரும் பக்தர்களுக்கு இடையூறான கிழக்கு சன்னதி முன்பான ஆக்கிரமிப்பையும், பார்க்கிங்கையும் அகற்றி பழமையான கோயிலின் பாரம்பரியத்தை காக்க அறநிலையத்துறை அதிகாரிகள் முன்வரவேண்டும் என ஆன்மீகவாதிகள் வலியுறுத்துகின்றனர்.