பதிவு செய்த நாள்
03
ஜூலை
2023
05:07
ஆஷாட பவுர்ணமியை ஆஷாட சுத்த பவுர்ணமி என்றும் அழைப்பர்... ஆஷாட பவுர்ணமி தினத்தன்றே, வியாச மஹரிஷியின் திரு அவதாரம் நிகழ்ந்ததால், குரு பூர்ணிமா தினத்தன்று, சன்யாசிகள் வியாச பூஜை செய்து சாதுர்மாஸ்ய விரதம் தொடங்குகின்றனர். சன்யாசிகள் ஓரிடத்தில் மூன்று நாட்களுக்கு மேல் தங்கியிருக்கக் கூடாது என்பது விதி. ஆனால், மழைக்காலத்தில், புழு, பூச்சிகள் இவற்றின் நடமாட்டம் அதிகரிப்பதால், சன்யாசி கள், இக் காலத்தில் சஞ்சாரம் செய்யும்போது, அவர்களின் கால்களில் பட்டு அவை மடிய நேரிடும். எனவே, அதைத் தவிர்ப்பதற்காக, அவர்கள் ஒரே இடத்தில் தங்குவார்கள். இதையே, சாதுர்மாஸ்ய விரதமாக அனுஷ்டிப்பது சன்யாசிகளின் வழக்கம்.
வியாச பூஜை தினத்தன்று, ஆதி குருவான ஸ்ரீமந் நாராயணருக்கும், வேத வியாசருக்கும், பூஜை செய்து விரதம் துவங்கப்படும். இவ்விரதத்தை நான்கு மாதங்கள் அல்லது நான்கு பட்சங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். ஆகவே, ஒரே இடத்தில் தங்கி இருப்பதாகச் சங்கல்பம் செய்து கொள்வார்கள். இவ்வாறு அவர்கள் ஒரே இடத்தில் தங்கியிருக்கும் போது, பல புராணத்தத்துவங்களையும், வேதாந்த ரஹஸ்யங்களையும் அவர்கள் உபதேசிப்பார்கள். அவர்கள் இருக்கும் இடத்தைத் தேடி பக்த கோடிகள் சென்று தம்மைப் புனிதப்படுத்திக் கொள்வர். அந்த இடத்தில் வசி க்கும் கிருஹஸ்தர்கள், சன்யாசிகளுக்குப் பூஜைக்குத் தேவையான பொருட்களை அளித்தல், பிக்ஷாவந்தனம் செய்தல் போன்ற புண்ணியச் செய ல்களைச் செய்வதால், அவர்களின் தலைமுறையே நலமடையும். இந்த சாதூர் மாத காலத்தில் குருவை கண்டிப்பாக வணங்கவேண்டும், அவர்களுக்கு நம்மால் முடிந்த கைங்கர்யங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்ட சன்யாசிகளுக்குச் சேவை செய்த ஒரு சிறுவனே, அதன் பலனாக, மறு பிறவியில் நாரத மஹரிஷியாகப் பிறந்தார். இவ்வாறு விரதம் இருக்கும் சன்யாசிகளுக்கு உதவுவதும். அவர்களது உபதேச மொழிகளைக் கேட்பதும் மிக்க நலம் பயக்கும்.