பதிவு செய்த நாள்
05
ஜூலை
2023
10:07
நாகை : சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நாகை அடுத்த சிக்கலில் அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. முருகப்பெருமானின் அவதார நோக்கமான சூரசம்ஹாரத்திற்கு இக்கோவிலில் தான், முருகப்பெருமான், அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி, திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்த புராண வரலாறு. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. திருப்பணிகள் முடிந்து, கடந்த 29ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதற்காக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜை செய்து வந்தனர். கும்பாபிஷேக நாளான இன்று யாகசாலை பூஜைகள் முடிந்து காலை 9 மணிக்கு புனிதநீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து கோவில் விமான கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கடும் அவதி: கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக காலை 6 மணி முதல் போக்குவரத்து மாற்றம் என நாகை - திருவாரூர் சாலையில் சிக்கலில் இருந்து 2 கி.மீ., தூரம் பனை மேட்டில் இருந்து வாகனங்கள் பொரவாச்சேரி வழியாக திருப்பி விடப்பட்டது. இதனால் குழந்தைகளுடன் கும்பாபிஷேகத்தை தரிசிக்க வெகு தூரத்தில் இருந்து வந்த பெண்கள், முதியவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.