திருநெல்வேலி: அரிகேசவநல்லூர் பெரியநாயகி சமேத அரியநாதசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது. தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, வீரவநல்லூர் அருகே அரிகேசவநல்லூர் பெரியநாயகி அம்பாள் சமேத அரியநாதசுவாமி கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும். அரியநாத சுவாமியை குபேரன் வழிபட்டுள்ளார். இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் மேற்கொள்ள கலந்து சில ஆண்டுகளாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் கடந்த 2ம் தேதி காலை கணபதி ஹோமம் பூஜைகளுடன் துவங்கியது. நவக்கிரக ஹோமம், தசா ஹோமம் என மூன்று நாட்கள் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. மேளதாளம் முழங்க புனித நீர் எடுத்து வரப்பட்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளின் கோபுர விமானங்கள் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் தெலுங்கானா மாநில கவர்னரும் புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, விழா ஒருங்கிணைப்பாளரும் பிரபல ஜோதிடருமான அரிகேசவநல்லூர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.