பதிவு செய்த நாள்
06
ஜூலை
2023
01:07
மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் குறும்பேற்றி ஹாலில் நேற்று துவங்கிய 12 ஜோதிர் லிங்கம், சகஸ்ர லிங்க தரிசனம் வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழகம், புதுச்சேரி, தென் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 144 இடங்களில் பாரதத்தின் புகழ்பெற்ற 12 ஜோதிர் லிங்கம், சகஸ்ர லிங்க தரிசனம் நடந்து உள்ளது. பல லட்சக்கணக்கான மக்கள் இந்த தரிசனத்தில் பங்கேற்று பயன் அடைந்து உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக குமரி மாவட்டம் மார்த்தாண்டம் ஸ்ரீகுறும்பேற்றி பகவதி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ குறும்பேற்றி ஹாலில் நேற்று மாலை 12 ஜோதிர் லிங்கம், சகஸ்ரலிங்க சிறப்பு தரிசன துவக்க விழா நடந்தது. மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளர் சகோதரி கோகிலா தலைமைவகித்தார். உண்ணாமலைக் கடை டவுன் பஞ்., முன்னாள் தலைவர் ஜெயசீலன், குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசைத்தம் பி, சமூக சேவகர் சிந்து குமார், இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் டாக்டர் விஜயகுமார், காஞ்சிர கோடு ஷாலோம் எலும்பு முறிவு மருத்துவமனை மேனேஜர் ஜெயக்குமார், கன்னியாகுமரி நேரு யுவ கேந்திரா ரெங்கநாதன், பேயோடுயோகிராம் சூரத் குமார், ஆனந்த குருகுலத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், வக்கீல் அசோகன், சின்ன தம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி ஜோதிலிங்கத்தை திறந்து வைத்தனர். வரும் 10ம் தேதி வரை தினமும் காலை 8 மணி துவங்கி இரவு 8 மணி வரை இச்சிறப்பு தரிசனம் நடக்கிறது. இன்றும், நாளையும் (6 மற்றும் 7ம் தேதி) பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசதியான வகுப்பு நடக்கிறது. 8ம் தேதி மாலை 6 மணிக்கு விளக்கு தியானம் நடக்கிறது. இதில், கலந்து கொள்பவர்கள் திருவிளக்கு மட்டும் கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 9ம் தேதி காலை சமயவகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு தியான வகுப்பு நடக்கிறது. இத்தரிசனத்தில், சிறப்பு அம்சமாக சோமநாத், மல்லிகார்ஜுன், மகாகாளேஸ்வர், ஓங்காரேஸ்வரர், கேதர்நாத், பீமா சங்கர், கிருஷ்ணேஸ்வர், ராமேஸ்வரம், நாகேஸ்வரர், வைத்தியநாத், திரியம்பகேஸ்வரர், விஸ்வநாத் ஆகிய 12 ஜோதிர் லிங்க சிவாலய ஸ்தலங்களை ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதுவும் அந்தந்த இடங்களில் உள்ள லிங்கங்களை அதே வடிவில் நேரில் தரிசனம் செய்வது போன்ற ஒரு அற்புத அனுபவம் கிடைக்கிறது. பிரம்ம குமாரி இயக்க மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளர் சகோதரி கோகிலா தலைமையில் ஜோதிர் லிங்கம், சகஸ்ர லிங்க சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.