பதிவு செய்த நாள்
08
ஜூலை
2023
03:07
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், 3.60 கோடி ரூபாய் மதிப்பில் ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டும் பணிகளை 2009 நவ.,18ல், அப்போதைய ஹிந்து அற நிலையத் துறை அமைச்சர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
பின் பல்வேறு காரணமாக மந்தகதியில் நடந்த பணிகள் 2019 டிசம்பரில் ராஜகோபுரத்தின் ஒன்பது நிலைகள் முழுமையாக கட்டிகளை, சிற்பங்கள் பொருத்தி வண்ணம் தீட்டும் பணியும் நிறைவடைந்தது. இந்நிலையில் 2020 ஜனவரியில், ராஜகோபுரத்திற்கு இணைப்பு படிகள் அமைத்து மஹா கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. ராஜகோபுரத்திற்கும், மலைக்கோவிலில் உள்ள தேர் வீதிக்கும், மொத்தம் 65 இணைப்பு படிகள் அமைப்பதற்கு, திட்ட மதிப்பீடு தயார் செய்து, அறநிலை துறையின் அனுமதிக்காக கடிதம் அனுப்பியும் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் நான்கு மாதங்களுக்கு முன் கற்களால் படிகள் அமைப்பதற்கு தீர்மானித்து டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போது ராஜகோபுரத்திற்கு கற்களால் வாசற்படி அமைக்க தீர்மானித்து அதற்கான கற்கள் உபயதாரர் மூலம் பெற்று வாசற்படியில் மயில், வேல் போன்ற ஓவியங்கள் வரையும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது. இது குறித்து திருத்தணி கோவில் அறக்காவலர் குழுத்தலைவர் ஸ்ரீதரன் கூறியதாவது: ராஜகோபுரத்திற்கு வாசற்படி அமைக்கும் பணி நடக்கிறது. ராஜகோபுரத்திற்கும், தேர்வீதிக்கும் இணைப்பு படிகள் அமைக்கும் பணிகள் துவங்கவுள்ளன. பணிகள் முடித்து, வரும் ஜனவரி மாதத்தில் ராஜகோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.