பதிவு செய்த நாள்
08
ஜூலை
2023
03:07
வடபழனி ஆண்டவர் கோவில் முகப்பு சாலை மற்றும் மாடவீதிகள் முழுதும் நடைபாதை கடைகள், வாகன ஆக்கிரமிப்பு தீராத பிரச்னையாக இருப்பதால், பக்தர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
சம்பந்தப்பட்ட மாநகராட்சி, காவல் துறையினர் தனி கவனம் செலுத்தி, ஆக்கிரமிப்பு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். சென்னை, வடபழனியில் அமைந்துள்ள ஆண்டவர் கோவில், தென்பழனிக்கு நிகரான இக்கோவிலுக்கு தினமும், ஏராளமான பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில், இந்த கோவிலின் முகப்பு சாலை, கோவிலைச் சுற்றியுள்ள மாடவீதிகள், குளக்கரை பிரதான நுழைவாயில் உள்ளிட்ட இடங்களில், ஆக்கிரமிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆற்காடு சாலையில் இருந்து வடபழனி ஆண்டவர் கோவில் நுழைவாயில் வரை, 40 அடி சாலை உள்ளது. சாலையின் இருபுறமும் கடைகள், உணவகங்கள் உள்ளன. இந்த கடைகள் மற்றும் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள், இச்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. பகல் நேரங்களில், சரக்கு இறக்கும் வாகனங்கள் இந்த சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. மேலும், புற்றீசலாக நடைபாதையில் பூ, மாலை, தேங்காய் விற்பனை செய்யும் கடைகள் முளைத்து விடுகின்றன. இவர்கள், சாலையை தேவையான அளவுக்கு ஆக்கிரமித்து, கடை விரிப்பதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் வரும் நேரத்தில் மட்டும், ஆக்கிரமிப்பாளர்கள் தற்காலிகமாக கடையை காலி செய்கின்றனர். அவர்கள் சென்றவுடன், மீண்டும் கடை விரிக்கின்றனர். இதனால், 40 அடி அகல சாலை, 20 அடி சாலையாக குறுகி, நெரிசல் ஏற்படுகிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களின் வாகனங்கள் செல்ல வழியின்றி தவித்து வருகின்றனர்.
அட்டகாசம்: கோவில் நுழைவாயில் முகப்பில் யாசகம் பெறுவோர், திருநங்கையர் ஏராளமானோர் உள்ளனர். இவர்கள், தரிசனம் செய்ய கோவிலுக்கு நுழையும் முன், பக்தர்களை சூழ்ந்து கொள்கின்றனர். பணம் கொடுத்தால் மட்டுமே, பக்தர்கள் கோவிலுக்குள் நுழைய முடியும் என்ற சூழலை ஏற்படுத்துகின்றனர். இது, பக்தர்களுக்கு மன வேதனை அளிப்பதாக உள்ளது.
பயனற்ற பாதுகாப்பு அறை: கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகத்தின் சார்பில், காலணிகளை பாதுகாக்கும் அறை உள்ளது. ஆனால், நடைபாதை ஆக்கிரமிப்பாளர்கள் தங்களின் கடைகளை பொருட்கள் வாங்க வேண்டும் என்பதற்காக பக்தர்களை வம்படியாக அழைத்து காலணிகளை பெற்றுக் கொள்கின்றனர். இதனால், காலணி பாதுகாப்பு அறை இருந்தும் பயனற்று கோவில் நுழைவாயில் சாலையின் இருபுறமும் காலணிகள் வரவேற்கின்றன.
மாடவீதிகளில் நெரிசல்: கோவிலின் கிழக்கு மாடவீதி சாலையை ஆக்கிரமித்து குழந்தைகள், பெண்களை கவரும் வகையிலான பொருட்கள் கொண்ட கடைகள் வைக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி பூ, மாலை கடைகளும் அதிகமாக உள்ளன. மாடவீதிகளின் மற்ற பகுதிகளில், இவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். மன நிம்மதியைத் தேடி கோவிலுக்கு வரும் பக்தர்கள், இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளால், நிம்மதி இழந்து தவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து, மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் இணைந்து, ஆக்கிரமிப்பாளர்களின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். -நமது நிருபர் -