மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை பந்தக்கால் முகூர்த்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2023 07:07
மயிலாடுதுறை: பிரசித்தி பெற்ற மாயூரநாதர் கோயிலில் செப்டம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது; திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்பு.
பார்வதிதேவி மயில் உருவம் கொண்டு சிவபெருமானை பூஜித்து தனது சாபம் நீங்க பெற்ற தலம் மாயூரம் எனப்படும் மயிலாடுதுறை. மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற மாயூரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் செப்டம்பர் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி அபயாம்பிகை அம்பாள் மற்றும் மாயூரநாதர் சுவாமிக்கு 33 குண்டங்களுடன் உத்தமபட்ச யாகசாலை அமைத்து வேள்வி நடத்தப்பட உள்ளது. இதற்கான யாகசாலை அமைப்பதற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது. பூஜைகளை திருவாவடுதுறை ஆதீன கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிராயன் சுவாமிகள் முன்னிலையில், சிவபுரம் வேத ஆகம பாடசாலை நிறுவனர் சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். இதில் முகூர்த்த பந்தகாலுக்கு, பால் பன்னீர் சந்தனம் மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோயிலை சுற்றி வலம் வந்து பந்தக்கால் நடப்பட்டது. இதில் கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.