உசிலம்பட்டி: செல்லம்பட்டி அருகே முதலைக்குளம் கிராமத்தில் முகத்தில் தாடியுடன் குதிரைமீது அமர்ந்துள்ள வீரனின் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது.
முதலைக்குளத்தில் நாடகமேடை அருகே உள்ள குளத்தின் கரையில் பாதி புதைந்த நிலையில் நடுகல் இருப்பதாக அந்த கிராமத்ததைச் சேர்ந்த பாஸ்கரன் உள்ளிட்டோர் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜனுக்கு தகவல் கொடுத்திருந்தனர். நடுகல்லைச் சுற்றியிருந்த மண்ணை அகற்றி பார்வையிட்டனர். உசிலம்பட்டி பகுதியின் பிறபகுதிகளில் உள்ள நடுகல்லைப்போல் இல்லாமல் இந்த நடுகல்லில் உள்ள வீரரின் முகத்தில் தாடி வைத்துள்ளது போன்ற அமைப்பு தெரிந்தது.
காந்திராஜன் கூறியதாவது: முதலைக்குளம் அருகே உள்ள சிறிய மலைப்பகுதியில் சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களும், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழி எழுத்துக்களும் உள்ளன. முதலைக்குளம் கண்மாயில் உள்ள குமிழிதூம்பு மதகு கல்லில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வட்டெழுத்துக்களில் கல்வெட்டு உள்ளது. எப்போதும் தண்ணீரில் மூழ்கியநிலையில் உள்ளதால் எழுத்துக்களில் தேய்மானம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக உள்ள இந்த கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள நடுகல் சுமார் ஐந்து அடி உயரமும், மூன்றரை அடி அகலமும் கொண்டது. குதிரையில் ஏறியுள்ள வீரனுக்கு கீழ் ஆணும், பெண்ணும் நின்றுள்ளது போன்ற சிற்பம் செதுக்கியுள்ளனர். உசிலம்பட்டி பகுதியில் காணப்படும் மற்ற நடுகற்களைப் போல இல்லாமல் இந்த வீரனின் முகத்தில் தாடி இருப்பது போன்ற அமைப்பு உள்ளது. குதிரையின் மேல் அமைக்கப்பட்டுள்ள அணிகலன்களை வைத்து இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் குழுவின் தலைவராக இருக்கலாம். சுமார் 400 ஆண்டுகள் பழமையான நடுகல்லாக இருக்க வாய்ப்புள்ளது. நடுகல் உள்ள பகுதி அருகில் உள்ள பெருமாள் கோயிலில் படிக்கட்டாக பெருமாள் கோயில்களுக்கான மானிய நிலங்களை சுட்டிக்காட்டும் வாமணக்கல்லை போட்டு வைத்துள்ளனர். இதுபோன்ற பழமையான நடுகல், வாமணக்கல்லை ஊராட்சி நிர்வாகமும், பொதுமக்களும் இணைந்து பாதுகாக்க வேண்டும் என்றார்.