காஞ்சி மஹாபெரியவரின் பக்தர் வங்கி அதிகாரியான என்.வி.சுப்பிரமணியன் பெங்களூருவில் வசித்தார். பெங்களுருவில் இருந்து தவன்கரே என்னும் ஊருக்கு பணிமாற்றப்பட்டார். குடும்பத்தை விட்டு தான் மட்டும் அங்கு தங்கினார்.
தவன்கரே அருகில் நடந்த ஒரு திருமணத்திற்கு குடும்பத்துடன் செல்ல வேண்டியிருந்தது. அப்போது நகைகளை வீட்டிலேயே வைத்து விட்டனர். சில நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் பெங்களுரு வந்தனர். திருடர்கள் சிலர் தவன்கரே வீட்டில் கைவரிசையைக் காட்டினர்.
பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்ட எதிர்வீட்டுப்பெண், சுப்பிரமணியத்திடம் விஷயத்தை தெரிவித்தார். காஞ்சி மஹாபெரியவரை வேண்டியபடியே தவன்கரே சென்றார். பொருட்கள் சிதறிக் கிடக்க, பதட்டமுடன் லாக்கரை திறந்தார். நகைகள் அப்படியே இருந்தன. லாக்கரின் சாவி அருகில் இருந்தும் திருடர்கள் எடுக்காததன் காரணம் புரியவில்லை. சில மாதம் கழித்து கர்நாடகா மங்களூருக்கு அருகிலுள்ள சோதே என்னும் கிராமத்திலுள்ள கோயிலுக்குச் சென்றார். அங்கு பூஜாரி அருள்வாக்கு கூறினார். சுப்பிரமணியம் வீட்டில் திருட்டு நடக்க இருந்ததாகவும், ஆனால் வீட்டில் இருந்த பெரியவர் ஒருவர் திருட்டை தடுத்ததாகவும் தெரிவித்தார். இதைக் கேட்ட சுப்பிரமணியத்திற்கு கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ‘காக்கும் எம் காவலனே... காண்பரிய பேரொளியே’ என சிவபுராண வரிகள் மட்டும் அவரது மனக்கண்ணில் தோன்றின. நம்பியவரைக் கரை சேர்ப்பார் காஞ்சி மஹாபெரியவர் என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி வேண்டும்?