அமர்நாத் யாத்திரை; பனிச்சரிவில் சிக்கி தமிழக தேனி பக்தர்கள் தவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2023 12:07
ஜம்மு: அமர்நாத் யாத்திரை சென்ற தமிழக பக்தர்கள் கனமழை காரணமாக பனிச்சரிவில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜம்மு - காஷ்மீரில் இமயமலை பகுதியில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலுக்கு ஆண்டுதோறும் யாத்திரையாக செல்லும் பக்தர்கள், இங்கு இயற்கையாக தோன்றிய பனிலிங்கத்தை தரிசித்து வருகின்றனர். இந்த ஆண்டு, அமர்நாத் யாத்திரை கடந்த 1ம் தேதி துவங்கியது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பனிச்சரிவில் தேசிய நெடுஞ்சாலைகள் மோசமான நிலையில் உள்ளது. இதையடுத்து அமர்நாத் பனிலிங்க தரிசனத்தில் தடை ஏற்பட்டது. யாத்திரையில் தடை ஏற்பட்டதால் 15 ஆயிரம் பக்தர்கள் ஜம்மு மற்றும் பல்வேறு இடங்களில் சிக்கித்தவித்து வருகின்றனர். இதில் அமர்நாத் யாத்திரை சென்ற தமிழக பக்தர்கள் 21 பேர் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்தும், குளிரால் பலருக்கு உடல் நல பாதிப்பும் ஏற்பட்டுள்ளது என வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு எங்களை மீட்டு எங்கள் ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களை விரைந்து மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி பக்தர்கள்: தேனி மாவட்டம் சின்னமனூர் மற்றும் உத்தமபாளையம் சேர்ந்த 21 நபர்கள் கடந்த ஜூலை மாதம் 4 ஆம் தேதி காஷ்மீர் அமர்நாத் கோயில் லிங்கம் புனித யாத்திரைக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு காஷ்மீரில் உள்ள பால்டால் பகுதிக்கு சென்றடைந்தனர். பின்னர் அங்கிருந்து 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அமர்நாத் கோயிலுக்கு பனி மலைச் சாலையில் நடந்து பனி லிங்கத்தை வணங்கி இரவு கோயிலில் தங்கினர். பிறகு மறுநாள் 7ஆம் தேதி புறப்பட்டு 14 கிலோ மீட்டர் நடந்து கீழே இறங்கி பால்டால் பகுதிக்கு வந்தடைந்தனர். அப்போது அங்கிருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்ட போது சி.ஆர் பி.எப் போலீஸ் அவர்களை வழி மறித்து ஸ்ரீநகருக்கும் காஷ்மீருக்கும் இடையில் பனி நிலச்சரிவு ஏற்பட்டு சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டதால் நீங்கள் யாரும் செல்ல முடியாது இங்கேயே தங்குங்கள் என எச்சரித்து மணி காம்ப் என்ற முகாம் இடத்தில் நான்கு நாட்களாக சோறு தண்ணீர் இல்லாமல் மாட்டி சிக்கி தவிப்பதாக அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். மேலும் போலீஸ் கிடைக்கும் உணவில் 21 பேர்களுக்கு கொஞ்சம் தந்து உதவி வருகின்றனர்.
இதுகுறித்து பனிமலைப் பகுதியில் சிக்கியுள்ள உத்தமபாளையம் போட்டோ கிராபர் செல்லப்பாண்டி கூறுகையில் ஜூலை 4 ம் தேதி நண்பர்கள் குழுவின் மூலமாக அமர்நாத் புனித யாத்திரைக்கு வந்தோம். 7ம் தேதி தங்கி விட்டு 8ம் தேதி மீண் டும் அமர்நாத் கோயிலிலிருந்து நடந்து பால்டால் பகுதிக்கு வந்தோம். ஸ்ரீ நகருக்கும் காஷ்மீருக்கும் இடையில் பனிமலை நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலை முழுவதும் காணாமல் போய் விட்டது, சி ஆர் பி எப் போலீஸ் எங்களை தடுத்து காப்பாற்றி தற்போது மணி காம்ப் முகாமில் தங்க வைத்துள்ளனர். எங்களுக்கு வேறு வழியின்றி பனி மலை இடையில் சிக்கி வெளி யேறாமல் முடங்கியுள்ளோம். எந்த தொடர்பும் இல்லாததால் கடந்த நான்கு நாட்களாக சிக்கி இருக்கிறோம். ஸ்ரீநகர் டில்லி வரை ரயில் டிக்கெட் கேன்சல் ஆகிவிட்டது, தற்போது கையில் எந்த பொருளாதாரமும் இல்லாமல் மிகுந்த சிரமத்தில் உயிரை கையில் பிடித்து கொண்டுள்ளோம், எனவே தமிழக முதல்வர் எங்களை உயிருடன் மீட்டெடுத்து காப்பாற்றி தமிழகத்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.