பதிவு செய்த நாள்
12
ஜூலை
2023
01:07
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே, கொள்ளிடம் ஆற்றில், மணல் திட்டில் கிடந்த, 200 கிலோ எடையுள்ள பழங்கால கருங்கல் புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே, வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர், நேற்று அதிகாலை, கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது, ஆற்றின் நடுவில் இருந்த மணல் திட்டில் 2.5 அடி உயரம், 200 கிலோ எடையில், கருங்கல்லாலான பழங்கால புத்தர் சிலை ஒன்று இருந்துள்ளது. இது குறித்து, சத்தியமங்கலம் வி.ஏ.ஓ., மனோகரனுக்கு தகவல் அளித்தனர். வி.ஏ.ஓ., பாபநாசம் தாசில்தார் பூங்கொடி உள்ளிட்டோர் அங்கு சென்றனர். ஆற்றில் 8 அடிக்கு மேல் தண்ணீர் சென்றதால், மீனவர்கள், தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன், மணல் திட்டில் இருந்த சிலையை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர். தொல்லியல் துறை அதிகாரிகள் சிலை குறித்து ஆய்வு செய்கின்றனர்.