ஆடி மாத பிறப்பு: அம்மன் கோயில்களில் காப்புக்கட்டி விரதம் துவங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2023 05:07
திருப்புத்தூர்: ஆடி மாதப் பிறப்பை அடுத்து திருப்புத்தூர் பகுதி அம்மன் கோயில்களில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர்.
திருப்புத்தூர் நகரின் மேற்கு எல்லைத் தெய்வமாக ராஜகாளியம்மன் உள்ளார். ஆடி மாதத்தில் அம்மனுக்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடக்கும். அதனை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் காளியம்மன் கோயிலுக்கு பக்தர் வந்து காப்புக் கட்டி விரதத்தை துவக்கினர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் பூத்தட்டு, பால்குடம் எடுப்பர். கடைசி வெள்ளிக்கிழமையன்று நுாற்றுக்கணக்கானோர் பால்குடம் எடுத்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து பூக்குழி மிதித்தலும் நடைபெறும். இதே போன்று ஆடிப்பிறப்பை முன்னிட்டு கிராமங்களில் காவல் தெய்வ வழிபாடு நடந்தது. புதுப்பட்டி மாரியம்மன், மாவூடியூத்து காளியம்மன், தென்மாபட்டு காளியம்மன், உடையநாதபுரம் பரவட்டான்காளி கோயில்களிலும் பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் துவக்கினர். திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ஆடிப்பூர உத்ஸவத்தை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு மூலவர் சிவகாமி அம்மனுக்கு அபிஷேகம் நடந்து வளையல் அலங்காரத்தில் அருள்பாலிப்பார். தொடர்ந்து மாலையில் அம்மன் சன்னதியில் திருவிளக்கு பூஜை நடந்து மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆடிப்பூரத்தன்று காலை 10:00 மணிக்கு அபிஷேகமும் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெறும்.