பதிவு செய்த நாள்
18
ஜூலை
2023
11:07
ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரம் 5ம் திருநாளான இன்று (ஜுலை 18) இரவு 10:00 மணிக்கு ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடக்கிறது.
இக்கோயிலில் இத்திருவிழா ஜூலை 14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஐந்தாம் நாளான இன்று (ஜுலை 18) காலை 10:00 மணிக்கு பெரியாழ்வார் மங்களாசாசனம் நடக்கிறது. இதற்காக ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் எழுந்தருளி பெரியபெருமாள், சுந்தர்ராஜ பெருமாள், சீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் மற்றும் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு மங்களாசாசனம் செய்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து கோயிலில் இரவு 10:00 மணிக்கு ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், சுந்தர்ராஜ பெருமாள், சீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனத்திலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் நான்கு ரத வீதிகளில் எழுந்தருள்கின்றனர். இதனை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரள்வர். விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர்.