காஞ்சி மஹாபெரியவரின் பக்தை புதுக்கோட்டை ராதா. ஒருமுறை இவர் காஞ்சிபுரம் மடத்திற்கு செல்வதை அறிந்த ராதாவின் மைத்துனர் கிருஷ்ணமூர்த்தி ‘பலாமுசு’ (பலாப்பிஞ்சு) இரண்டை கொடுத்து மஹாபெரியவருக்கு சமர்ப்பிக்கச் சொன்னார். காஞ்சி மடத்திற்குச் சென்ற ராதா பழங்களுடன் பலாப்பிஞ்சையும் மஹாபெரியவரின் முன்பு ஒரு தட்டில் வைத்தார். அருகில் நின்ற சீடரான வேதபுரி, ‘‘பெரியவா... புதுக்கோட்டை ராதாமாமியின் வீட்டில் காய்த்த பலாப்பிஞ்சு இது’’ என்றார். அதைக் கையில் எடுத்து பார்த்தபடி, ‘‘பலாமரம் இருக்கா’’ எனக் கேட்டார் மஹாபெரியவர். ‘‘இல்லை சுவாமி. சந்தையில் தான் வாங்கினோம்’’ என பதிலளித்தார் ராதா. உடனே வேதபுரியிடம், ‘‘ஏண்டா... என்ன சொன்னாலும் கேப்பேன்னு நினைச்சியா... பலாப்பிஞ்சு கடையில் வாங்கினதாமே’’ என்றார். வேதபுரியோ தலைகுனிந்தார். தெரிந்தால் மட்டும் சொல்லலாம். இல்லாவிட்டால் அமைதியாக இருப்பது நல்லது என்பதை இதன் மூலம் உணர்த்தினார். இதே போல இன்னொரு சம்பவமும் நடந்தது. ராதா காஞ்சிபுரம் செல்ல இருப்பதை அறிந்த உறவினரான குப்புசுவாமி என்பவர் ‘ஸ்ரீராமஜெயம்’ எழுதிய நோட்டு ஒன்றும், காணிக்கையாக பத்து ரூபாயும் கொடுத்தனுப்பினார். ‘நோட்டை கொடுக்கும் போது பெங்களூரு குப்புசுவாமி நமஸ்காரம் சொல்லச் சொன்னார்’ என சொல்லும்படியும் கூறினார். அன்று கூட்டம் அதிகம் இருந்தது. சில பக்தர்களுடன் மஹாபெரியவர் பேசிக் கொண்டிருந்தார். தயக்கத்துடன் நோட்டை தட்டில் வைத்து விட்டு ராதா வணங்கியபடி நடந்தார். ஓரிரு நிமிடத்தில் நோட்டை கையில் பிடித்துக் கொண்டு, ‘பெங்களூருகாரா யார் இங்கு வந்தது’’ எனக் கேட்டார் மஹாபெரியவர். நோட்டு அட்டையில் இடம் பெற்ற முகவரியைப் பார்த்து தான் கேட்கிறார் என்பதை அறிந்து ஓடி வந்தார் ராதா. ‘என் உறவினர் பெங்களுரு குப்புசுவாமியின் நோட்டு இது. அவர் தன் சார்பாக நமஸ்காரம் சொல்லும்படி கூறினார்’ என்றார் பவ்யமாக. தயக்கத்தைப் போக்கி விட்டு பலர் முன்னிலையில் பேச வைத்த மஹாபெரியவரை மீண்டும் வணங்கினார் ராதா. உள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்ய மஹாபெரியவரின் அருள் நமக்கு துணைபுரியட்டும்.