பதிவு செய்த நாள்
19
ஜூலை
2023
10:07
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா ஐந்தாம் நாளான நேற்று காலை பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவில் ஐந்து கருடசேவையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஐந்தாம் நாளான நேற்று காலை திரு ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்களா சாசனம் நடந்தது. இதில் முதலில் பெரியாழ்வார் எழுந்தருளினார். பின்னர் பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், சீனிவாச பெருமாள் திருத்தங்கல் அப்பன், ஆண்டாளுடன் ரங்கமன்னார் எழுந்தருளினர். பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்து வைத்தார். காலை 10:00 மணிக்கு துவங்கிய மங்கள சாசனம் மதியம் 2:00 மணிக்கு முடிவடைந்தது. ஏராளமான உள்ளூர், வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் சடகோபர் ராமானுஜ ஜீயர், தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, கோயில் பட்டர்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இரவு 10:00 மணிக்குமேல் ஐந்து கருட சேவை துவங்கியது. இதில் ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், சுந்தர்ராஜ பெருமாள், சீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனத்திலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, மாட வீதிகள் மற்றும் ரத வீதிகளை சுற்றி வந்தபோது, ஸ்ரீவில்லிபுத்தூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாம சங்கீர்த்தன பஜனையுடன் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.