பதிவு செய்த நாள்
21
ஜூலை
2023
01:07
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை நடைபெற்றது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் ஆடி குண்டம் திருவிழா, கடந்த,18ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இன்று காலை அன்னைத் தமிழில் லட்சார்ச்சனை நடந்தது. கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி முன்னிலை வகித்தார். பூசாரி ரகுபதி உற்சவர் வனபத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தார். அதைத் தொடர்ந்து சிறுமுகை மூலத்துறையைச் சேர்ந்த சக்திவேல், குழந்தைவேல் ஆகியோர் தலைமையில் சிவனடியார்கள், உபயதாரர்கள் பாக்கியலட்சுமி குடும்பத்தார், பெண்கள், பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்று, மலர்களால் அம்மனுக்கு லட்சார்ச்சனை செய்தனர். 23ம் தேதி கொடியேற்றமும், 24ல் மாலையில் பொங்கல் வைத்து குண்டம் திறப்பும், 25ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு, பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், 6:00 மணிக்கு குண்டம் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து, 26ல் மாவிளக்கு பூஜையும், அலகு குத்தி தேர் இழுத்தலும், பூ பல்லக்கில் அம்மன் திருவிழாவும், நடைபெற உள்ளது. 27ம் தேதி குதிரை வாகனத்தில் அம்மன் பரிவாட்டை நிகழ்ச்சியும், வானவேடிக்கையும் நடைபெற உள்ளது. 28ம் தேதி மகா அபிஷேகம், மஞ்சள் நீராட்டும், கொடி இறக்கமும் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி மறு பூஜை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி பரம்பரை அறங்காவலர் வசந்தா ஆகியோர் செய்து வருகின்றனர்.