மெக்காவில் குரைஷி இனத்தில் பிறந்தவர் கதீஜா. இவர் இருமுறை திருமணம் செய்த விதவை பெண். செல்வந்தரான இவர் தனது ஒழுக்கத்தால் ‘தாஹிரா’ என்னும் பட்டத்தால் அழைக்கப்பட்டார். மெக்காவில் இருந்து வியாபாரத்திற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட சரக்குகளில் பாதி இவருடையது. ஒருமுறை நபிகள் நாயகத்தின் குணத்தை கேள்விப்பட்ட கதீஜா, அவருக்கு உயர்ந்த பதவியை கொடுக்க விரும்பினார். இந்த விஷயத்தை நாயகத்திற்கு சொல்லி அனுப்பினார். அவரும் அப்பதவியை ஏற்று ஷாம் தேசத்துக்கு வியாபாரம் செய்ய சென்றார். அதிக லாபத்தை ஈட்டினார். அந்தக் கணக்குளை கதீஜாவிடம் ஒப்படைத்தார். இவரது நேர்மையை பார்த்து அவரைத் திருமணம் செய்ய விரும்பினார் கதீஜா. பெரியவர்களிடம் கலந்து ஆலோசித்து திருமணம் செய்து கொண்டனர். நாயகத்தின் குடும்பத்தினரை அரவணைத்து சென்றார். திருமணச் செய்தியை கேள்விப்பட்ட நாயகத்தின் செவிலித்தாயான ஹலிமா மெக்காவிற்கு வந்தார். சில நாள் அவர் தங்கியபின் ஊருக்கு செல்லும்போது நாற்பது ஆடுகளைப் பரிசாகக் கொடுத்து அனுப்பினார் கதீஜா.