திரேதா யுகத்தில் மிதிலை நகரை சிறப்புற ஆட்சி செய்தவர் ஜனகர். அரசராக இருந்தாலும் அவர் பெரிய ஞானி. ஒருநாள் யாகசாலை அமைக்க கலப்பையை கொண்டு அவர் நிலத்தை உழுதார். அப்போது அவருக்கு ஒரு குழந்தை கிடைத்தது. அந்தக் குழந்தை வேறு யாருமல்ல. ஸ்ரீதேவியின் அம்சமான சீதை. தர்மத்தின் தலைவனான ஸ்ரீராமபிரானின் மனைவி. அதேபோல் கலியுகத்தில் பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்தவர் பட்டர்பிரான். இவருக்கு பெரியாழ்வார் என்றும் பெயருண்டு. இவர் ஸ்ரீவில்லிபுத்துார் வடபெருங்கோயிலுடையானுக்கு பூமாலையும் பாமாலையும் சமர்ப்பித்து பக்தி யாகம் செய்தவர். இதற்கு இவர் அமைத்திருந்த யாகச்சாலைதான் நந்தவனம். ஒருநாள் துளசிகளை பறிக்கும்போது செடியின் அடியில் ஒரு குழந்தை இவரைப் பார்த்து சிரித்தது. பெரியாழ்வார் முதலில் பதட்டப்பட்டார். அப்போது பார்த்து குழந்தை அழுதது. எதைச் சொல்லியும் அழுகை நிற்கவில்லை. ‘பெருமாளே. நாராயணா இது என்ன சோதனை’ என புலம்பியதும் அழுகை நின்றது. இது என்ன ஆச்சர்யம் என நினைத்தவாறு மீண்டும் ‘கோவிந்தா. நாராயணா’ என்றார் பெரியாழ்வார். அப்போது குழந்தையின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. கோதை எனப்பெயர் சூட்டி வளர்க்க ஆரம்பித்தார் அவர். அந்தக் குழந்தைதான் பூதேவியின் அம்சமான கோதை என்னும் ஆண்டாள்.