ஏர்வாடி தர்காவில் வலம் வந்த மாரியம்மன் கோயில் முளைப்பாரி: பாத்தியா ஓதப்பட்டு கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2023 11:07
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகிம் பாதுஷா நாயகம் தர்காவில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
ஏர்வாடியில் பழமை வாய்ந்த வாழவந்த மாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. உற்ஸவ விழாவின் நிறைவு நாளை முன்னிட்டு நேற்று மாலை 5:30 மணிக்கு அம்மன் கோயிலில் இருந்து 500க்கும் மேற்பட்ட முளைப்பாரியை தலையில் சுமந்து ஆண்கள் மற்றும் பெண்கள் ஏர்வாடி தர்கா அமைந்துள்ள வளாகத்தை மூன்று முறை வலம் வந்தனர். மூன்று முளைப்பாரிகள் தர்காவில் கொண்டு செல்லப்பட்டு உலக நன்மைக்கான சிறப்பு பாத்தியா ஓதப்பட்டது. ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் வாழவந்த மாரியம்மன் கோயில் விழா குழுவினருக்கு மரியாதை செய்தனர். அதன் பின் ஊர்வலமாக சின்ன ஏர்வாடி கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு பாரி கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஒவ்வொரு ஆண்டும் தர்காவில் முளைப்பாரி வைக்கப்பட்டு வழிபாட்டிற்கு பின் கொண்டு செல்வது வழக்கம்.