பதிவு செய்த நாள்
27
ஜூலை
2023
01:07
வடபழனி, வடபழனி கோவில் குளத்தை சுற்றி நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றுவதில், மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பிரசித்தி பெற்ற சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு தினமும், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், இப்பகுதி அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர், கோவில் குளத்தைச் சுற்றி கார்களை நிறுத்துகின்றனர். மேலும், இருசக்கர வாகனம் மற்றும் கார் மெக்கானிக் கடை வைத்துள்ளவர்கள், தங்களிடம் பழுது பார்க்க வரும் வாகனங்களையும், குளத்தைச் சுற்றி நிறுத்துகின்றனர். இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களது வாகனங்களை நிறுத்த இடமின்றி சிரமப்படுகின்றனர். குறிப்பாக விசேஷ நாட்கள் மற்றும் திருவிழாக்களின் போது, பக்தர்கள் அதிக அளவில் வரும் போது, கடுமையான நெரிசல் ஏற்பட்டு, பக்தர்கள் அவதிப்படுகின்றனர். ஆனாலும், இந்த வாகனங்களை அகற்ற, போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நவடிக்கை எடுப்பதில்லை என, பக்தர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். சாலைகளில் கேட்பாரற்று நீண்ட நாட்களாக நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் தன்னிச்சையாக நிறுத்தப்படும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், நேற்று அறிவித்துள்ளார். கமிஷனர் உத்தரவுப்படி, வடபழனி கோவில் குளத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற, மாநகராட்சி அதிகாரிகள் நவடிக்கை எடுப்பார்களா என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.