சிதம்பரம் மாரியம்மன் கோவில் திருவிழா; பக்தர்கள் செடல் போட்டும் தீமிதித்தும் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2023 05:07
சிதம்பரம்: தாம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் நடந்த தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செடல் போட்டும் தீமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிதம்பரத்தில் அமைந்துள்ளது பிரிசித்தி பெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோவில். சிதம்பரம் பஸ் நிலையம் எதிரில் அமைந்துள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி மாதம் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா கடந்த (வெள்ளிக்கிழமை) 21 ஆம் தேதி காப்பு கட்டி கொடியேற்றதுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. 25-ந்தேதி இரவு தெருவடைச்சான் உற்சவமும், 30-ந்தேதி காலை தேரோட்டமும் நடந்தது. முக்கிய விழாவான தீமிதி திருவிழா இன்று திங்கட்கிழமை நடந்தது. விழாவையொட்டி அதிகாலை 5 மணியளவில் இருந்தே பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர். கோவில் வளாகத்தில் அங்க பிரதட்சணம், அலகு போடுதல், பால் காவடி, பாடை இழுத்தல் என அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் பலர் மாவிளக்கு போட்டும், கோவிலை சுற்றி அங்க பிரதர்ஷணம் செய்தனர். காலை 9 மணிக்குமேல் தீ மிதிப்பவர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மதியம் 2 மணிக்கு மேல் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து பாலமான் கரை அருகே கரகத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து சிறப்பு அலங்காரங்கள் செய்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு 5 மணி அளவில் கோயில் வளாகத்தில் திமிதி திருவிழா நடந்தது. இதில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தீமிதி திருவிழாவில் பக்தர்கள் நல கருதி சமூக ஆர்வலர் சீனு, மக்கின், குமார் பாதுகாப்பு குறித்து பேசினர். ஏ எஸ் பி ரகுபதி தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை இரவு விடையாற்றி உற்சவமும், நாளை மறுநாள் காலை மஞ்சள் நீர் விளையாட்டு, திருவிழா முடிவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் பிரேமா வீராசாமி, பரம்பரை அருக்காவலர் ஸ்தானிகர் கலியமூர்த்தி மற்றும் பலர் செய்து வருகின்றனர்.