சிவனும், விஷ்ணுவும் ஒன்றே என்பதை விளக்கும் ஆடித்தபசு காட்சி; சங்கரன்கோவிலில் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2023 06:07
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு இன்று (31ம் தேதி) ‘சிவனும், விஷ்ணுவும் ஒன்று’ என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் வகையில் சங்கரநாராயண சுவாமி காட்சி கொடுக்கும் அரிய நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதங்களில் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் வரை நடக்கும். முன்னொரு காலத்தில் சிவன், விஷ்ணு இருவரில் யார் பெரியவர் என்ற சர்ச்சை பக்தர்களிடையே ஏற்பட்டது. இதுகுறித்து பக்தர்கள் கோமதி அம்பாளிடம் முறையிட்டனர். பக்தர்களின் சந்தேகத்தை தீர்க்க வேண்டி கோமதி அம்பாள் ஒற்றைக்காலில் தபசு இருந்தார். அம்பாளின் வேண்டுகோளை ஏற்று சங்கரலிங்கசுவாமி ரிஷப வாகனத்தில் தனது உடலின் வலதுபுறத்தை சிவனாகவும், இடதுபுறத்தை விஷ்ணுவாகவும் மாற்றி சங்கரநாராயண சுவாமியாக காட்சி கொடுத்தார். இந்த அரிய நிகழ்ச்சியே ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 7ம் திருநாளான 27ம் தேதி இரவு அம்பாள் பூம்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 9ம் திருநாளான 29ம் தேதி தேரோட்டம் நடந்தது. 11ம் திருநாளான இன்று (31ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு மூலஸ்தானம் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை 9 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், மண்டகப்படி அழைப்பு சுருள் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 12 மணி அளவில் அம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி தபசு மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். மாலை 6.30 மணி அளவில் தெற்கு ரத வீதியில் முக்கிய நிகழ்ச்சியான ‘சிவனும், விஷ்ணுவும் ஒன்று’ என்ற ஒப்பற்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் சங்கரலிங்கசுவாமி ரிஷப வாகனத்தில் சங்கரநாராயண சுவாமியாக காட்சி கொடுக்கும் அரிய நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 12 மணி அளவில் யானை வாகனத்தில் சங்கரலிங்கசுவாமி காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் ஜான்சிராணி மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர். ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் நகரில் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.