பதிவு செய்த நாள்
01
ஆக
2023
12:08
பல்லடம்: வாழை தோட்டத்து அய்யன் கோவிலில், காலி பிளாஸ்டிக் டப்பாக்கள், 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல்லடம் அடுத்த, சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவிலில், பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட பல விசேஷ நாட்களில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலில் வழிபட்டு செல்கின்றனர். அய்யன் இங்கு மூலவராக உள்ளார். இங்குள்ள புற்று மண்ணை தோல் வியாதிகள், விஷக்கடிகள் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தினால் குணமாகும் என்பது ஐதீகம். இதன்படி, கோவிலுக்கு வரும் பக்தர்கள் புற்றுமண்ணை எடுத்துச் செல்ல தவறுவதில்லை. அவ்வாறு, பக்தர்கள் புற்று மண் எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் கவர்கள், டப்பாக்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர். பக்தர்கள் பயன்பெறும் வகையில், கோவில் அருகே பிளாஸ்டிக் டப்பாக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஐந்து ரூபாய் மதிப்புள்ள காலி பிளாஸ்டிக் டப்பாக்கள், 25 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இது குறித்து தினமலர் நாளிதழில், கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியானதை தொடர்ந்து, கூடுதல் விலைக்கு டப்பா விற்பனை செய்யப்படுவது தடுக்கப்பட்டது. தற்போது, மீண்டும் அதிக விலைக்கு டப்பா விற்கப்படுவதாக, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து பக்தர்கள் சிலர் கூறுகையில், சிறிய, காலி பிளாஸ்டிக் டப்பாக்கள், 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுவும், கோவில் வளாகத்திலேயே இச்செயல் நடந்து வருகிறது. கோவில் நிர்வாகிகளும் இது குறித்து கண்டு கொள்வதில்லை. ஐந்து ரூபாய் மதிப்புள்ள டப்பாக்களை கூடுதல் விலைக்கு விற்று புற்று மண் எடுத்துச் செல்லும் பக்தர்களை ஏமாற்றி வருகின்றனர். கோவில் நிர்வாகம் இந்த அத்துமீறலை தடுக்க வேண்டும். பக்தர்களுக்கு, குறைந்த விலைக்கு டப்பாக்கள் கிடைக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.