63 நாயன்மார் பெருவிழாவில் கையில் செங்கோல் ஏந்தி நடராஜர் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2023 12:08
பெரியகுளம்: பெரியகுளத்தில் 63 நாயன்மார் பெருவிழாவில் தமிழர்களின் பராம்பரியமான கையில் செங்கோல் ஏந்தி நடராஜர் வீதி உலாவில் தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான சிவனடியார்கள், பக்தர்கள் பங்கேற்றனர். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில் தனிச்சிறப்பான மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் உட்பட 63 நாயன்மார்களுக்கு சன்னதிகள் உள்ளது.
நாயன்மார்களுக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு கோபிசெட்டிபாளையம் சிலாக்கர யோகி திருஞானசம்பந்தர் திருமடம் ஆதீனம் ஸ்ரீமத் வாமதேவ சிவாக்கர தேசிக சுவாமிகள், சைவ சமய சிவாலய திருப்பணியாளர் எஜமான் பாண்டிமுனீஸ்வரர் மற்றும் சிவனடியார்கள் இணைந்து 63 நாயன்மார்களுக்கு தீபாராதனை, சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து ஸ்ரீ ராமானுஜம் மண்டபத்தில் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மதியம் விருந்து வழங்கப்பட்டது. மாலையில் காளஹஸ்தீஸ்வரர் கோயிலிருந்து சிறுவர்கள், சிறுமிகள் 63 நாயன்மார்கள் வேடமிட்டு முன்னே செல்ல நடராஜர் சுவாமி வீதி உலா நடந்தது. எஜமான் பாண்டி முனீஸ்வரர் கையில் செங்கோல் ஏந்தி வந்தார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மாயா பாண்டீஸ்வர கைலாய வாத்தியக்குழு சிவனடியார்கள் இசை முழக்கத்துடன் பெரியகுளம் நகரின் முக்கிய பகுதிகளில் வீதி உலா வந்தது. ஏற்பாடுகளை பெரியகுளம் ஸ்ரீ ராஜேந்திர சோழீஸ்வரர் சிவனடியார்கள் அறக்கட்டளை தலைவர் குணசேகரன், செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் ராஜவேலு மற்றும் தேனி மாவட்டம் உலக சிவனடியார்கள் திருக் கூட்டத்தினர் செய்திருந்தனர்.