பதிவு செய்த நாள்
09
அக்
2012
10:10
ராசிபுரம்: அக்டோபர், 23ம் தேதி, ராசிபுரம் மாரியம்மன் கோவிலில், ஐப்பசி மாத தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது.ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற செல்லியாண்டியம்மன், மாரியம்மன், ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, வரும், 23ம் தேதி இரவு, 8 மணிக்கு, பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது.அக்டோபர், 24ம் தேதி முதல் தினமும் காலை, 10 மணிக்கு, ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை, இரவு, 7 மணிக்கு பல்வேறு வாகனங்களில், ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அக்டோபர், 25ம் தேதி கம்பம் நடுதல், நவம்பர், 5ம் தேதி பூவோடு எடுத்தல், நவம்பர், 6ம் தேதி கொடியேற்று விழாவும் நடக்கிறது. நவம்பர், 7ம் தேதி அம்மை அழைத்து பொங்கல் வைத்தல், 8ம் குண்டம் இறங்கும் விழா, அன்று மாலை, 4 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் தேதி உடற்கூறு வண்டி வேடிக்கையும், 10ம் தேதி, மாரியம்மன் ஸ்வாமி புஷ்ப பல்லக்கில் பவனி வந்து சத்தாபரணமும் நடக்கிறது.ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.