பதிவு செய்த நாள்
09
அக்
2012
10:10
குற்றாலம்: குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோயில் ஐப்பசி விசுத் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை கொடியேற்று விழா நடந்தது. குற்றாலத்தில் பிரசித்தி பெற்ற குற்றாலநாதர் - குழல்வாய்மொழி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி விசுத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு திருவிழாவினை முன்னிட்டு நேற்று அதிகாலை "ஓம் நமச்சிவாய கோஷம் முழங்கிட கொடியேற்று விழா நடந்தது. தொடர்ந்து குற்றாலநாத சுவாமி, குழல்வாய்மொழி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.கொடியேற்று விழா நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் வெங்கடேஷ், கோயில் பணியாளர்கள், முன்னாள் அறங்காவலர் வீரபாண்டி மற்றும் குற்றாலம், காசிமேஜர்புரம், மேலகரம், இலஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து இலஞ்சி குமாரர் வருகை, அப்பர் சுவாமிகள் உழவார பணிவிடை, மாலையில் வெள்ளி ஏக சிம்மாசன வாகனத்தில் வீதியுலா நடந்தது. ஐப்பசி விசு திருவிழாவில் சிறப்பு பெற்ற நிகழ்ச்சிகளாக வரும் 11ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 12ம் தேதி தேரோட்டம், 14ம் தேதி நடராஜமூர்த்தி தாண்டவ தீபாராதனை, 15ம் தேதி சித்திரசபையில் நடராஜமூர்த்தி பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.