பதிவு செய்த நாள்
10
அக்
2012
10:10
நகரி: திருப்பதியில் லட்டுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க வரும் பக்தர்கள், திருமலையில் உள்ள லட்டு கவுன்டர்களில், கூடுதல் லட்டுகள் கேட்டால், 25 ரூபாய் விலையில், ஒருவருக்கு, நான்கு லட்டுகள் வழங்கப்படும். ஆனால், தற்போது திருமலைக்கு வரும், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், கூடுதல் லட்டுகள் கேட்போருக்கு, இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இந்த நடைமுறை, அக்., 7ம் தேதி முதல், அமலுக்கு வந்துள்ளது.திருமலையில், தினமும், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், சாமி தரிசனம் செய்கின்றனர். இலவச தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு, 10 ரூபாய் விலையில், இரண்டு லட்டுகள் வழங்கப்படுகின்றன. கூடுதல் லட்டுகள் கேட்போருக்கு, ஒருவருக்கு நான்கு லட்டுக்கள் வீதம் வழங்கும் போது, தினமும், மூன்று லட்சம் லட்டுகள் வரை தேவைப்படுகிறது. ஆனால், தற்போது லட்டு தயாரிக்க நியமிக்கப்பட்டு உள்ள ஊழியர்களால், மூன்று லட்சத்திற்கும் மேல் தயாரிக்க முடியாத நிலை உள்ளது. அதனால், கூடுதலாக கேட்போருக்கு இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. மேலும், இம்மாதம், 15ம் தேதி, திருமலையில் நவராத்திரி பிரமோற்சவம் துவங்க உள்ளதால், பக்தர்களின் வருகைக்கு, ஏற்ப லட்டுகள் கையிருப்பில் வைத்து கொள்ள வேண்டிய, நிலை ஏற்பட்டுள்ளது. இதனாலும், கூடுதலாக, நான்கு லட்டுகள் வழங்குவது, இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது.