பதிவு செய்த நாள்
14
ஆக
2023
11:08
கும்மிடிப்பூண்டி : கவரைப்பேட்டை அருகே, ஏ.என்.குப்பம் கிராமத்தில், நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் ஒன்று, முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. 2014ல், அப்பகுதியை சேர்ந்தோர், கோவிலை சூழ்ந்திருந்த புதர் செடிகளை அகற்றிய போது, கருவறையில் சிவலிங்கம் மட்டும் கிடைத்தது.
அம்பாள், நந்தி உள்ளிட்ட மற்ற சுவாமி சிலைகள் கிடைக்கவில்லை. அக்கோவிலின் முன்புறமும், பின்புறமும் பிரமாண்ட குளங்கள் உள்ளன. இன்றளவிலும் அக்குளங்கள் துாய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அக்கோவிலில், 200 ஆண்டுகளுக்கு முன் வரை, வழிபாடுகள், தெப்ப திருவிழா நடந்ததாகவும், அதன்பின், முறையான பராமரிப்பின்றி, கோவில் சிதிலமடைந்து, புதர்கள் மண்டியதாக கூறப்படுகிறது. சிதிலமடைந்த சிவன் கோவிலை, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் புனரமைத்து, மீண்டும் முறையான வழிபாடுகளை மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என, அப்பகுதியினரும் ஆன்மிக அன்பர்களும் எதிர்பார்க்கின்றனர். தற்போது, அக்கோவிலில் பூஜை நடத்தி, நிர்வகித்து வரும் முதியவர் காணியப்பா கூறுகையில், சிவலிங்கம் கண்டெடுத்த நாள் முதல், நாள் தவறாமல், ஒரு கால பூஜை செய்து வருகிறேன். வரலாற்று சிறப்பு மிக்க கோவிலை புனரமைக்க, அரசு அல்லது ஆன்மிக குழுவினர் முன் வர வேண்டும் என தெரிவித்தார்.