பதிவு செய்த நாள்
14
ஆக
2023
04:08
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைக்கு செல்லும் பாதையில் கடைகள் வைக்க அனுமதிக்க முடியாது என வனத் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த மலைவாழ் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு நிரந்தர வழி காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி, புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. மலையடிவாரங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் ஆடு, மாடுகள் மேய்த்தல், மூலிகை பொருட்கள் சேகரித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆடி அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் பாதையில் தற்காலிக கடைகள் அமைத்து தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் விற்க கடைகள் அமைப்பதற்கு வனத்துறை அனுமதிக்க மலைவாழ் மக்கள் கோரினர். வனத்துறை அனுமதி மறுத்ததால் ராம் நகரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் மலைப்பகுதியில் குடியேறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக வத்திராயிருப்பில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகத் துணை இயக்குனர் திலீப்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்துவாக அறிவிக்கப்பட்டு, அதன் படி தாணிப்பாறை ராம்நகர் மக்கள் மட்டுமின்றி ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு, அத்தி கோயில், ஜெயந்த் நகர், வள்ளியம்மாள் நகர், ராஜபாளையம் அய்யனார் கோயில் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மலைவாழ் மக்களும், வத்திராயிருப்பு சுமை தூக்கும் தொழிலாளர்களும் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு பேச்சு வார்த்தைக்கு திரண்டனர். இயக்குனர் திலீப் குமார், தாசில்தார் செந்தில்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் ஆகியோர் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது. சுமை தூக்கும் தொழிலாளர்கள் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னு பாண்டியன் ஆகியோர் திலீப்குமாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர்களின் கோரிக்கையை துணை இயக்குனர் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் ராம் நகர், செண்பகத் தோப்பு, அய்யனார் கோயில் உட்பட ஒவ்வொரு பகுதி மலைவாழ் மக்கள் சார்பில் இரண்டு பேரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், மலைப்பகுதியில் கடைகள் வைக்க அனுமதிக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் ஏமாற்றம் அடைந்த மலைவாழ் மக்கள், வன உரிமைச் சட்டம் 2006 ன் படி தங்களின் நிரந்தர வாழ்வாதாரத்திற்கு வனத்துறை வழி ஏற்படுத்தி தர வேண்டும். இல்லையெனில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தனர். இதே போல் தாங்கள் தொடர்ந்து மலையில் குடியேறும் போராட்டம் நடத்த போவதாக தாணிப்பாறை ராம்நகர் மலைவாழ் மக்கள் தெரிவித்தனர்.