காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2023 01:08
விக்கிரமசிங்கபுரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் பக்தர்கள் பொங்கலிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்துக்களின் மிக முக்கிய விரத நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் சொரிமுத்து அய்யனார் கோயிலில் பொங்கலிட்டு சுவாமி தரிசனம் செய்தால் தங்களின் பாவங்கள் நீங்கி சகல சவுகரியங்களுடன் சுபிட்சமாக வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் ஆடி அமாவாசை தினமான இன்று சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு அதிகாலை முதல் பக்தர்கள் அதிகளவில் வந்தனர். தாமிரபரணி நதியில் புனித நீராடி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். கோயிலில் மகாலிங்கசுவாமி, சொரிமுத்து அய்யனார், பூதத்தார், தளவாய்மாடசுவாமி, பிரம்மராட்சஷி, பட்டவராயர், இருளப்பன், கரடி மாடசுவாமி, பாதாளகண்டிகை போன்ற தெய்வங்களை பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயில் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.