ஸப்வான் பின் முஅத்தில் என்ற தோழருடன் நபிகள் நாயகம் பேசிக்கொண்டிருந்தபோது பெண் ஒருவர் வந்தார். அவரிடம், ‘‘உங்கள் அருகில் இருக்கும் ஸப்வான்தான் என் கணவர். அவர் நான் தொழுதால் அடிக்கிறார். நோன்பு நோற்றால் நோன்பை முறிக்கும்படி வற்புறுத்துகிறார். சூரியன் உதயமாகிவிடும் வரை பஜ்ர் (வைகறை) தொழுகை அவர் தொழுவதில்லை’’ என நாயகத்திடம் முறையிட்டார். உடனே ஸப்வானிடம் இதற்கு விளக்கம் அளிக்கும்படி கூறியதற்கு, அவர் கீழ்க்கண்டவாறு பதில் கூறினார். என் மனைவி சொல்வது அனைத்தும் உண்மையே. இதற்கு காரணம் அவள் தொழுகையில் இரண்டிரண்டு அத்தியாயங்கள் ஓதுகின்றாள். அதனால் நான் தடுக்கிறேன். இரண்டாவதாக அவள் தொடர்ந்து நோன்பு வைக்கிறாள். இதனால் குடும்பம் நடத்துவதற்கே சிரமமாக உள்ளது. அதுமட்டும் இல்லை. சூரியன் உதயமாகாத வரை கண்விழிக்க முடியாதவர்கள் என்ற ஒரு குடும்பத்தை சேர்ந்தவன் நான். (இரவில் மக்களின் வயல்களுக்கு நீர் பாய்ச்சும் பணியைச் செய்தவர்) என விளக்கம் கூறினார். இதற்கு நாயகம், ‘‘தொழுகையில் ஒரே அத்தியாயம் போதுமானது. எந்தப் பெண்ணும் தன் கணவனின் அனுமதியின்றி நோன்பு நோற்கக்கூடாது. நீர் கண் விழிக்கும்போது தொழுது கொள்ளும்’’ என்றார். இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான். கட்டாயக் கடமையான தொழுகைகளைத் தொழவிடாமல் மனைவியை தடுக்க கணவருக்கு உரிமையில்லை. ஆயினும் கணவனின் தேவைகளை கவனத்தில் கொள்வதும், மார்க்கப்பற்றின் ஆர்வத்தால் நீண்ட அத்தியாயங்கள் ஓதாமல் மனைவி இருப்பதும் அவசியம்.