பொதிகை மலையில் சாஸ்தாவின் முதல் தலமான சொரிமுத்தையனார் கோயில் உள்ளது. சாஸ்தாவான இவர் இடது காலை மட்டும் குத்துக் காலிட்டு வலக்காலைத் தொங்கவிட்டபடி பூரணை, புஷ்கலா தேவியருடன் இருக்கிறார். தாமிரபரணியில் உள்ள புனித தீர்த்தங்களில் முதலாவதான பாணதீர்த்தம் இக்கோயிலில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளது. வானத்தில் இருந்து விழுவதைப் போல தோற்றம் கொண்ட இதனை ’வான தீர்த்தம்’ என்பர். அம்பில் புறப்பட்ட பாணம் போல அருவி நீர் கொட்டுவதால் பாணதீர்த்தம் என வந்ததாகச் சொல்வர். ஆடி அமாவாசையன்று பக்தர்கள் பெருமளவில் நீராடி வழிபடுவர். திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் 50 கி.மீ., அங்கிருந்து காரையார் செல்ல பஸ் வசதி உள்ளது.