விக்கிரக வழிபாட்டை நபிகள் நாயகம் கண்டித்தார். இதனால் குரைஷி இனத்தினர் கோபமுடன் இவரது பெரிய தந்தை அபூதாலிப்பிடம் சென்றனர். அவரிடம், ‘‘உங்கள் மீது மதிப்பு வைத்துள்ளோம். ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டு. உங்கள் தம்பியின் குமாரர் நம் முன்னோர்களை இகழ்ந்து பேசுகிறார். இதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவரை தடுத்து நிறுத்துங்கள்’’ எனக்கூறினர். அபூதாலிபுக்கு இது கவலையை உண்டாக்கியது. சமூகத்தாரைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதே சமயம் நபிகள் நாயகத்தை கைவிடவும் மனம் இல்லை. அவரிடம் ‘‘உங்களுடைய புதிய கொள்கையை கைவிட்டு உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள். என்னையும் காப்பாற்றுங்கள்’’ என வேண்டினார். அதற்கு அவர், ‘‘பெரிய தந்தையே. நீங்கள் எனக்கு உதவினாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி. எனக்கு உண்டான கடமையை கைவிடமாட்டேன். எனக்கு நபித்துவம் அருளிய இறைவன் இட்ட கட்டளைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வேன். இதனால் என்ன ஆனாலும் பரவாயில்லை. அவன் எனக்கு நிச்சயமாக உதவி செய்வான்’’ என்றார். இவரது மனஉறுதியை அறிந்த அபூதாலிப், ‘‘நீங்கள் எதற்கும் பயப்படவேண்டாம். பணியைத் தொடர்ந்து செய்யுங்கள். உங்களுக்கு எல்லாவிதத்திலும் துணையாக இருப்பேன்’’ என சொன்னார்.